கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 5 முன்னணி மாநிலங்கள் எவை, 5 பின்தங்கிய மாநிலங்கள் எவை என்ற விவரம் அறிவோம்.
கரோனாவுக்கு எதிரான பேராயுதமாக உலகம் முழுவதும் தடுப்பூசித் திட்டம் கையிலெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசித் திட்டம் தொடங்கியது.
இங்கு, கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 36 கோடிக்கும் அதிகமானோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள்தொகையில் 70% பேருக்கு இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தினால் பாதுகாப்பான சூழலை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கோடு தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிஹார், ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக உள்ளது ஆகையால் அங்கு திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதேவேளையில், கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசித் திட்டம் சுணக்கமில்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை, நாடு முழுவதும் 36 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதுடையவர்களில் 11 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.