தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டெல்டா கரோனா வைரஸ் காரணமாக ஃபிஜியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவைத் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் தனது நாட்டு மக்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஃபிஜி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஃபிஜி பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா கூறும்போது, “ஃபிஜியில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் டெல்டா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்துப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்ளாக அரசு ஊழியர்கள் முதல் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் பணியிலிருந்து எடுக்கப்படுவார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள்ளாக முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.
ஃபிஜி நாட்டில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 700க்கும் அதிகமாக உள்ளது.