புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோர். 
ஒரு நிமிட வாசிப்பு

மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பான வகையில் செயல்படுத்த வேண்டும்: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

வீ.தமிழன்பன்

மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பான வகையில் செயல்படுத்த வேண்டும் எனப் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

காரைக்கால் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் விதமாக, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு (டிஷா) கூட்டம் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, எம்.நாக தியாகராஜன், உள்ளாட்சித்துறை இயக்குநர் ரவிதீப் சிங் சாகர், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், காரைக்காலில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு திட்டச் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது மத்திய அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட திருநள்ளாற்றில் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் அதிக அளவில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

நான் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் பகுதிகளில் தலா ஒரு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், மீதமுள்ள பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT