சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 115 பேர் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை இன்று (ஜூலை 08) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்துவைத்து, மருத்துவ மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ராஜீவ் காந்தி மருத்துவமனையைப் பொறுத்தவரையில் கரோனாவுக்கு இதுவரை 55,052 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கின்றனர். கரோனா சிகிச்சைக்குச் சிறப்பான வகையில் மருத்துவ சிகிச்சை இம்மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ளது. 2,600 பேர் சிகிச்சை பெறும் அளவுக்குப் படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொற்று வேகமெடுத்தபோது ஒரு படுக்கைகூட கிடைக்காத நிலையில், தற்போது 115 பேர் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு இம்மருத்துவமனையில் 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 216 பேர் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனர். இம்மருத்துவமனையில் சிறப்பாக சேவை புரியும் மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மனதாரப் பாராட்டுகிறது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.