மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது. எனவே, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இவற்றின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூலை 08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் இப்ராகிம் பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, எரிபொருள் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று, கறம்பக்குடியில் வட்டாரத் தலைவர் ஞானசேகரன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, திருமயம், விராலிமலை, கீரனூர் உட்பட 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.