மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்குப் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் கோவாக்சின் தடுப்பூசி சுத்தமாக இல்லாததால் முதல் டோஸ் போட்டவர்கள், 2-வது டோஸ் போட முடியாமல் கடும் அலைக்கழிப்பிற்கு ஆளானார்கள்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 6,06,992 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும், சிறப்பு முகாம்கள் சார்பில் நகர்ப்புறக் குடியிருப்புகள், கிராமங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்தடுத்து கரோனா அலைகளில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் என்று நம்ப ஆரம்பித்துள்ளதால் தடுப்பூசி போட அதன் மையங்களில் அதிகாலை முதலே குவிய ஆரம்பித்துள்ளனர்.
தற்போது பொதுமக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி இல்லாததால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுவதில்லை. சுகாதாரத்துறை, மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் கடும் அலைக்கழிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி சுத்தமாக இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசியும் போதுமானதாக இல்லை. அதனால், முதல் டோஸ் போட்டவர்கள், 2-வது டோஸ் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். முதல் டோஸ் போட வந்தவர்கள், தடுப்பூசி போதுமான அளவு இல்லாததால் போட முடியாமல் தவித்தனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் இளங்கோவன் பள்ளியில் போடப்படும் தடுப்பூசி மையத்திலே கோவாக்சின் இல்லாததால் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் கடும் அலைக்கழிப்பிற்கு ஆளானார்கள். அதுபோல், கோவாக்சின் முதல் போடுவதற்காக டோக்கன் பெற்று அதிகாலை முதல் காத்திருந்தவர்கள், இன்று அந்த தடுப்பூசி வராததால் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
வரும் நாட்களிலே குறிப்பிட்ட எந்தத் தடுப்பூசியும் வராத பட்சத்தில் அதுபற்றிய தகவலை முன்கூட்டியே சுகாதாரத்துறை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.