ஒரு நிமிட வாசிப்பு

ஸ்டேன் சுவாமி மறைவு: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல்

செய்திப்பிரிவு

பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கடந்த மே 29ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பலரும் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் மனித உரிமைகள் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “84 வயதான மனித உரிமைப் பாதுகாவலர், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணம் எங்களை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. எங்களைக் கலக்கமடையச் செய்துள்ளது” என்று பதிவு செய்துள்ளது.

ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

SCROLL FOR NEXT