திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியதில், மூவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி குழந்தை நகரைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் (38). கேரளாவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக ஊருக்கு வந்தவர், நேற்றிரவு (ஜூலை 05) தனது இருசக்கர வாகனத்தில் (மொபட்), சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்குச் சென்றார்.
அப்போது, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கருக்கன்காட்டுபுதூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது வந்தபோது, அங்கிருந்த தடுப்புச் சுவரின் (பேரிகார்டு) மீது நிலை தடுமாறி மோதியதில், கோபி கண்ணன் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் மற்றும் வாகனம் ஆகியவை சாலையில் கிடந்தன.
இதனைத் தொடர்ந்து, பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பனியன் நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர். சாலையில் வாகனம் கிடப்பதைப் பார்க்காமல் இருந்ததால், அங்கு கிடந்த வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கினர்.
இளைஞர்கள் அதிவேகமாக வந்ததால், சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்தவர்கள், பெருமாநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு சென்ற காவல்துறையினர், மூவரது சடலத்தையும் கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இரு இளைஞர்கள் தமிழ்ச்செல்வன் (22) மற்றும் சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.