கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கருவலூர்- கிட்டாம்பாளையம் இடையே அமைக்கப்பட்டு வரும் சாலையைத் துளையிட்டுப் பரிசோதித்துப் பார்த்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். உடன், அரசு அலுவலர்கள். 
ஒரு நிமிட வாசிப்பு

ஜல்லி, மணல், கலவை சரியாக உள்ளதா?- புதிய தார் சாலையைத் துளையிட்டு சோதித்த கோவை ஆட்சியர்

க.சக்திவேல்

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம், கனியூர், மயிலம்பாடி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கருவலூர்- கிட்டாம்பாளையம் இடையே ரூ.1.84 கோடி மதிப்பில், பிரதம மந்திரி ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள், கனியூர் ஊராட்சியில் சென்றாம்பாளையம்- தட்டாம்புதூர் சாலை மேம்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஜல்லி, மணல், கலவை முறையாக உபயோகப்பட்டுள்ளதா என சாலையைத் துளையிட்டுப் பரிசோதித்துப் பார்த்தார்.

அப்போது அவர் கூறும்போது, "ஊரகப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். எனவே, அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், கவனமுடனும் பணியாற்ற வேண்டும்.

வளர்ச்சித் திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றிச் செயல்பட வேண்டும். திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் தொடர் கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT