பிறந்தநாள் கேக்கால் சிறுத்தையிடமிருந்து தப்பித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்தவர்கள் ஃபிரோஸ் மன்சூரி, சபீர் மன்சூரி. சகோதரர்களான இவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கேக் வாங்கச் சென்றனர். கேக் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் கரும்புத் தோட்டத்துக்குள் இருந்து திடீரென சிறுத்தை ஒன்று தென்பட்டது. அவர்கள் சென்ற பாதை வேறு சேறும் சகதியுமாக இருக்க வாகனத்திலிருந்து இறங்கி ஓட முடியாது, வாகனத்தை வேகமாகவும் செலுத்த முடியாது. ஓரளவு நிதானமான வேகத்தின் வாகனத்தை செலுத்த 500 மீட்டர் தூரத்தில் சிறுத்தை பின் தொடர்ந்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த சபீர் கையிலிருந்த கேக் டப்பாவைத் திறந்து கேக்கைத் தூக்கி சிறுத்தையின் முகத்தில் வீசியுள்ளார்.
அதைச் சற்றும் எதிர்பாராத சிறுத்தை திகைத்துப் போய் துரத்தலை விடுத்து கரும்புத் தோட்டத்துக்குள் பாய்ந்துள்ளது.
தாங்கள் சிறுத்தையிடமிருந்து தப்பித்தது குறித்து சபீர், மரணத்தின் பிடியிலிருந்து மயிரிழையில் பிழைத்தோம் என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ஏதாவது ஆபத்தில் சிக்கும்போது உங்கள் உள்ளுணர்வு தப்பிக்க என்ன வழி சொல்கிறதோ அதை உடனே செய்யுங்கள் என்பார்கள். அப்படித்தான், அந்த சகோதரர்களும் கையிலிருந்த கேக்கை ஆயுதமாகப் பயன்படுத்தித் தப்பித்துள்ளனர் என்றார்.