ஒரு நிமிட வாசிப்பு

நாளை முதல் பீக் அவரில் 5 நிமிடங்களுக்கு ஒரு சேவை: பெங்களூரு மெட்ரோ ரயில்

செய்திப்பிரிவு

நாளை (ஜீலை 1ம் தேதி) முதல் பீக் அவர் எனப்படும் பணி நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வார நாட்கள் முழுவதும் இது அமலில் இருக்கும் என்றும், வார நாட்களில் மற்ற சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயன்பாட்டைப் பொறுத்து இதில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்குக்குப் பின்னர் பெங்களுருவில் கடந்த வாரம் மீண்டும் மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கின. வார நாட்களில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலும் மெட்ரோல் ரயில்களை இயக்க அரசு அனுமதித்துள்ளது.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மெட்ரோ ரயில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையையே மெட்ரோ ரயில் நிர்வாகம் ஊக்குவித்தாலும், நாளை முதல் ஒருமுறை மேற்கொள்ளப்படும் பயணத்துக்கு ஸ்மார்ட் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஜூன் 21 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 3,222 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 28,40,428 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT