மின் தடைக்கு அணில் காரணமென்று கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் அல்லது நோபல் விருதுகள் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மின் துறை அமைச்சர்.
முன்னதாக இன்று மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவதைப் பார்த்தால் அதிமுக ஆட்சியில் வெளிநாடுகள் சென்ற அணில்கள் தற்போது திரும்பி வந்து மின் தடையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. அவரது கண்டுபிடிப்பிற்கும் ஆஸ்கர், நோபல் பரிசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் @SellurKRajuoffl இதைப்பற்றி @PThangamanioffl யிடமோ உயர் நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அணில்கள் பற்றி குறிப்பிடப்பட்ட பத்திகள் அடங்கிய புகைப்படத்தையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.