கரோனா, பொருளாதாரம், பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுடன் ஜூன் 24-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து காங்கிரஸ் விவாதிக்கும் என்று கூறப்படுகிறது.
காணொலி மூலம் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தற்போதைய கரோனா சூழல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்துக் கலந்தாலோசிக்க உள்ளனர். மத்திய அரசு குறித்தும் அதன் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவை தவிர்த்து பெட்ரோல்- டீசல் விலை குறித்தும், பண வீக்கம் அதிகரிப்பு குறித்தும் கரோனா பெருந்தொற்றைக் கையாள்வது குறித்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விளக்கி, ஆர்ப்பாட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிடும் என்று கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரச் சூழலும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தையும் காங்கிரஸ் கையில் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மாதம் தொடங்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுடன் சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.