இரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? இது கட்சி நடத்துபவருக்கு அழகா? என்று தொண்டர்களிடம் சசிகலா பேசியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில், சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சி நிர்வாகிகளுடனும், தன் ஆதரவாளர்களுடனும் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக உலா வருகின்றன. அந்த ஆடியோக்களில், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், விரைவில் நிர்வாகிகளைச் சந்திப்பேன் எனவும், சசிகலா கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை எனவும், அதனால், அமமுக நிர்வாகிகளுடன்தான் சசிகலா பேசி வருவதாகவும் அதிமுகவினர் தெரிவித்துவந்தனர்.
இந்த சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகளை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சசிகலாவுடன் பேசிய 15 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 15) திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி, திருப்பூரைச் சேர்ந்த காத்தவராயன், தேனியைச் சேர்ந்த சிவநேசன் ஆகிய தொண்டர்களிடம் சசிகலா பேசினார்.
"1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் தொண்டர்கள் ஜெயலலிதாவின் பக்கம் நின்றனர். 1987-லிருந்து இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். இது இரண்டாவது முறை. இதிலிருந்தும் மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒருவர், இரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? இது கட்சி நடத்துபவருக்கு அழகா?
என் முதுகில் குத்தி குத்தி, இனி குத்துவதற்கு என் முதுகில் இடமே இல்லை. அந்த அளவுக்குச் செய்துவிட்டனர். ஆனால், இப்போது தொண்டர்களையும் அவ்வாறே செய்தால் நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?" என சசிகலா பேசியுள்ளார்.