உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், தானும் ரத்ததானம் வழங்கி முன்மாதிரி காட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, உலக குருதி கொடையாளர்கள் தினம், ஒவ்வொரு ஆண்டும் குருதியேற்று மருத்துவத்தின் தந்தை கார்ல் லான்ஸ்டெய்னரின் பிறந்த தினமான ஜூன் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் ரத்ததானம் செய்யும் கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாண்டு, உதிரத்தை கொடுத்து உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம் என்ற மேற்கொளை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ரத்த தானம் வழங்க முன் வரவேண்டும். ரத்த தானம் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் எம்.கணேஷ்குமார், சசிகலா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எஸ்.எம்.அப்துல்காதர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குருதியேற்றுத்துறை தலைவர் டாக்டர் மணிமாலா, ரத்த வங்கி அலுவலர் டாக்டர் ரவிசங்கர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.