டாக்டர் கே.மோகன்ராஜ் 
ஒரு நிமிட வாசிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் கரோனா தடுப்பூசித் திருவிழா

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மாவட்டத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வழக்கமாகத் தடுப்பூசி போடப்படும் 13 மையங்களிலும், இவை அல்லாமல் கூடுதலாக 14 மையங்களிலும் ஜுன் 16 முதல் 19-ம் தேதி வரை கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. கூடுதலாகத் தெரிவிக்கப்பட்ட 14 மையங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

இந்த தடுப்பூசித் திருவிழாவில் 18 முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படும். 18 முதல் 44 வயதுடையோர் கண்டிப்பாகப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றக்கூடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யாமலும் நேரிடையாக ஆதார் அட்டையுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 45 வயதுக்கு மேற்பட்டோர் எந்தப் பகுதியைச் சேர்ந்தோராகவும் இருக்கலாம். அவர்களும் தங்கள் ஆதார் அட்டையுடன் வரவேண்டும். மக்கள் இந்த தடுப்பூசித் திருவிழாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று டாக்டர் கே.மோகன்ராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT