திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது சுகாதாரத்துறையினருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தாக்கத்தின்போது நாளொன்றுக்கு பாதிப்பு அதிகபட்சமாக ஆயிரத்தை எட்டியிருந்தது. கடந்த 2 வாரங்களுக்குமுன் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 700 முதல் 800 வரையில் நீடித்தது.
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் கிடைக்காமலும் பலநோயாளிகள் திக்குமுக்காடியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை இறக்குமுகத்தில் இருக்கிறது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 99 ஆக குறைந்திருந்தது.
இதில் திருநெல்வேலியில் மட்டும் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 23, மானூர்- 2, நாங்குநேரி- 7, பாளையங்கோட்டை- 5, பாப்பாகுடி- 6, ராதாபுரம்- 10, வள்ளியூர்- 16, சேரன்மகாதேவி- 1, களக்காடு- 4.