ஒரு நிமிட வாசிப்பு

கோவில்பட்டியில் தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிச் சென்ற லாரி மின்வயரில் உரசியதால் தீ விபத்து

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து மினி லாரியில் ஏற்றி வந்த தீப்பெட்டி கழிவுகள் மின்வயரில் உரசியதால் தீப்பிடித்தது.

கோவில்பட்டி தொழிற்பேட்டையில் தீப்பெட்டி தொழிற்சாலை, தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை என ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை மினி லாரியில் தீப்பெட்டிக் கழிவுகளை ஏற்றினர். அதிகளவு கழிவுகள் ஏற்றிய அந்த லாரி, ஆலையை விட்டு வெளியே வந்தபோது, மேலே சென்ற மின்வயரில் உரசி உராய்வு ஏற்பட்டது.

இதில், வாகனம் தீப்பிடித்தது. இதையடுத்து லாரியை சில அடி தூரத்துக்கு நகர்த்திய ஓட்டுநர் கார்த்திக் அங்கேயே நிறுத்தினர்.

உடனடியாக தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், தீ மளமளவென பிடித்து எரிந்ததால், அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டரை நிறுத்தி, அதிலிருந்து குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து, மினி லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதில், மினி லாரி சேதமடைந்தது. இந்த கழிவுகள் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பேப்பர் மில்லுக்கு கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தால் பெரியளவு சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்தை டிஎஸ்பி கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT