கரோனா தொற்று பாதிப்பால் கோவையில் இன்று (ஜூன் 9) ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை சென்னையைவிட அதிகமாகும்.
சென்னையைவிட முதல் முறையாகக் கடந்த மே 26-ம் தேதி கோவையில் தினசரி கரோனா பாதிப்பு அதிகமானது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக அதே நிலை நீடித்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், தினசரி குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவையில் இன்று ஒரு நாள் பாதிப்பு 2,319 ஆக உள்ளது. 4,992 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 24,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் உள்ள ஈரோட்டில் இன்று ஒரே நாளில் 1,405 பேருக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள சென்னையில் 1,345 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், சென்னையில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.