ஒரு நிமிட வாசிப்பு

மெல்போர்னில் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

மெல்போர்னில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெல்போர்ன் நகர அரசுத் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் கடந்த மாதம் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெல்போர்ன் நகரில் அடுத்த 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் இனி 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்துத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தற்போது வரை 60 பேர் இங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 910 பேர் பலியாகி உள்ளனர். 15% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

SCROLL FOR NEXT