கரோனா தொற்று தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் மீதான காப்புரிமையை ரத்து செய்யக்கோரி இணைய வழி கையெழுத்து இயக்கத்தை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் எச்.ஆதிசேஷன் கூறியதாவது:
கரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகளின் காப்புரிமை பெரு நிறுவனங்கள் வசம் உள்ளதால், மருந்துகள், தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளில் வயதானோருக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டதால் அங்கு கரோனா தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு 200 கோடி தடுப்பூசிகளை செலுத்த வேண்டியது அவசியம் மற்றும் அவசரமும் கூட. இதற்காக தொழில்நுட்ப பரிமாற்றங்கள், காப்புரிமை மற்றும் வர்த்தக நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப பரிமாற்றம், மூலப்பொருட்கள், வர்த்தக ரகசியங்கள் ஆகியவற்றை அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் எந்த நிபந்தனையுமில்லாமல் வழங்க வேண்டும்.
அறிவுசார் சொத்து காப்புரிமைகள் விதிகளுக்கு உலக வர்த்தக அமைப்பு விலக்கு கொடுக்க வேண்டும். மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு, சர்வதேச மருந்துகள் உற்பத்தியாளர்களும், தடுப்பூசிகள் தயாரிப்பாளர்களும் தாமாகவே முன்வந்து காப்புரிமைகளை விட்டு கொடுத்து, தொழில் நுட்ப பரிமாற்றங்களை மற்ற உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்தியாவில் அனைத்து வயதானோருக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். இதனால் கரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் காப்புரிமையை ரத்து செய்யவும், அவற்றின் தொழில் நுட்ப பரிமாற்றத்தை வலியுறுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் டிஜிட்டில் முறை கையெழுத்து இயக்கத்தை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியுள்ளது.
இது வரை இந்தியா உட்பட 20 நாடுகளை சார்ந்த நான்கு லட்சம் மக்கள் இணையவழியாக கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.