உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே தொற்று இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுந்தர்லால் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சுந்தர்லால் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் குமார் குப்தா 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''கடந்த மே 24ஆம் தேதி பிரசவத்திற்காக ஒரு பெண் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே அவருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், பிறந்த குழந்தைக்கு கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
தொற்று பாதிப்பு குறித்து மேலும் கூறிய குமார் குப்தா, ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட சில வரம்புகள், கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.