ஒரு நிமிட வாசிப்பு

தேனியில் பொய்யான தகவலின் பேரில் இ-பதிவு செய்து வந்த நபர்கள் கைது: வாகனமும் பறிமுதல்

என்.கணேஷ்ராஜ்

தேனியில் பொய்யான தகவலின் பேரில் இ-பதிவு செய்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கடந்த 24ம் தேதி நேற்று முன் தினம் முதல் தளர்வுகளற்ற முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து வந்த மாருதி சுசூகி XL6 காரில் பயணம் செய்த சரவணன் என்பவர், சோதனையின் போது இறப்பு தொடர்பாக பெரியகுளம் செல்வதாக இ-பதிவு சான்றைக் காண்பித்துள்ளார்.

விசாரணையில் அவர் இறப்பு தொடர்பாக செல்வதாக பொய்யான தகவல்கள் தெரிவித்து இ- பதிவு பெற்றுள்ளார் என்பது தெரியவந்ததால், தேனி காவல் நிலைய அதிகாரிகள் சரவணன் மீதும், அவருக்கு உதவிய கணினி மைய உரிமையாளர் பிரகாஷ் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இதுபோல் பொய்யான தகவல்கள் தெரிவித்து இ-பதிவு செய்யும் நபர்கள் மீதும், பொய்யான தகவல்களை பதிவு செய்து உதவும் கணினி மைய உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT