பெங்களூரில் இருந்து சரக்கு வாகனத்தில் தக்காளி மூட்டைக்குள் எடுத்துவரப்பட்ட மது பாட்டில்களைத் திருக்கோவிலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பயிற்சி உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமைக் காவலர் கணேஷ், இதர போலீஸார் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்தின்போது குரங்கன் காப்புக்காடு வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் தக்காளி மூட்டைகள் இருப்பதைக் கண்டு எங்கிருந்து வருகிறது என விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் தக்காளி மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் 432 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வில்லிவளத்தைச் சேர்ந்த வாகனத்தின் ஓட்டுநர் சத்யராஜ் (28), வாகனத்தின் உரிமையாளர் ரமேஷ் (32) இருவரையும் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.