மதுரையில் நடைப்பயிற்சி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர்களின் அழைப்பை ஏற்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வில்வ மரக்கன்றை நட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்காக முதல்வர் நேற்று இரவு மதுரை வந்தார்.
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மதுரை வந்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் நடை பயிற்சி சென்றார்.
நடைப்பயிற்சியை முடித்து விட்டு நீதிமன்றம் அருகே வந்த அமைச்சரை, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் பசுமை அரண் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள், நேரில் சந்தித்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடுமாறு அழைப்பு விடுத்தனர்.
இதையேற்று நீதிமன்ற வளாகத்தில் அமைச்சர் வில்வ மரக் கன்றை நட்டார். வழக்கறிஞர்கள் ரமேஷ், அன்புநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் வழக்கறிஞர் அன்புநிதி கூறுகையில், பசுமை அரண் அமைப்பினர் நீதிமன்ற வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு வழக்கறிஞர். சைதாபேட்டையில் இதுவரை 900 மரக்கன்றுகள் வரை நட்டுள்ளார்.
இதனால் அவரை மரக்கன்று நட அழைத்தோம். வில்வ மரக்கன்றை நட்டு விட்டு பசுமை அரண் அமைப்பினரின் பணியை அமைச்சர் பாராட்டினார் என்றார்.