தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாற்றை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இப்பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தாமிரபரணி - நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டத்தின் 4 ம் கட்ட பணிகள் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி, பெருமாள்நகர், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று அவர் ஆ்ய்வு செய்தார்.
ரூ. 872.45 கோடி செலவில் 75 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுவரும் வெள்ளநீர் கால்வாயின் 4- ம் கட்டபணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அப்பாவு கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த 2008-09 ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 4-ம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலை குறுக்கே பாலமும் ரயில்வே பாலமும் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ. 15 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. 4-ம் கட்ட பணிகளில் நடைபெறவிருக்கும் பாலப் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு செய்யும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளோம். இத் திட்டம் தொடங்கும்போது திட்ட மதிப்பீடு ரூ. 370 கோடியாக இருந்தது. இப்போது அது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இத் திட்டத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞான திரவியம், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர்கள் ரமேஷ், சிவக்குமார், ஆக்னஸ் ராணி, நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் மதிவாணன், ரயில்வே துணை பொதுமேலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.