மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்கு, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதுரையில் இருந்து திருச்சி வந்த மு.க.ஸ்டாலின், அந்தச் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்
முதல்வர் வருகையையொட்டி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் -ஒழுங்கு) பி.தாமரைக்கண்ணன், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஏ.அருண், மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் (சட்டம்- ஒழுங்கு), ஆர்.வேதரத்தினம் (குற்றம் -போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.