ஒரு நிமிட வாசிப்பு

கிணற்றில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; மகளும் உயிரிழப்பு: தருமபுரி அருகே சோகம்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்ற முயன்றபோது தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கைலாயபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இன்று (20.05.2021) காலை இவர் தனது மகள் சாய் பிரனிதாவை (4) அழைத்துக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது மகள் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு கூச்சலிட்ட முருகேசன், மகளைக் காப்பாற்றக் கிணற்றில் குதித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால், அரூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கித் தேடினர்.

முதலில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 1 மணி நேரத் தேடலுக்குப் பிறகு முருகேசன் உடலைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தந்தையும், மகளும் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சம்பவம் குறித்து அரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT