பொது மக்களின் பங்கேற்புடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பின் இணைய வழி கருத்தரங்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு போர்க்கால நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்றுவது எப்படி? என்ற இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் நாட்டைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சே.ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
டாக்டர்கள் சிவபாலன் இளங்கோவன், ஜெகதீஸ் குமார் மற்றும் எவிடன்ஸ் கதிர், எம்.சி.ராஜன், வழக்கறிஞர் கீதா, பேராசிரியர் பழனித்துறை ஆகியோர் பேசினர்.
இந்த கருத்தரங்கில், கரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு முழுமையாக கவனிக்க தவறிவிட்டது. வெளிப்படை தன்மை, மக்கள் மீதான அக்கறை மத்திய அரசிடம் குறைந்துள்ளது. கரோனா மரணங்களுக்கு மத்திய அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.
மக்களிடம் அரசுகள் அறிவியல் பூர்வமான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மேல் பழிப்போடுவதை நிறுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை மட்டும் நம்பி கரோனா தடுப்பு பணிகளை அரசுகள் மேற்கொள்ளாமல் குடிமை சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும். மக்களின் பங்கேற்புடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வழக்கறிஞர் கவிதா நன்றி கூறினார்.