வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆய்வு மேற்கொண்டார்.
வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் மந்த நிலையில் நடைபெறும் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதை பணிகளை விரைவுபடுத்தி போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்பணிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு. அப்பாவு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.
வரும் 24-ம் தேதிக்குள் ரயில்வே சுரங்க பாதையில் போக்குவரத்தை தொடங்கும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ், வள்ளியூர் பேரூராட்சி அலுவலர் கிறிஸ்டோடபர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லிங்குசாமி, டென்னிஸ், முகம்மது, விஜயா கோகிலா வஸ்னி, சத்தியமூர்த்தி, வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.