காரைக்குடி அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள். 
ஒரு நிமிட வாசிப்பு

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தன்னார்வலர்கள்: முதல்வரின் நிவாரண நிதிக்கு குன்றக்குடி அடிகளார் ரூ.10 லட்சம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிக் கருவிகளை தன்னார்வலர்கள் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தேவையும் அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பைத் தடுக்க காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இன்று ரூ.5 லட்சம் மதிப்பிலான 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

இதில் தமிழக மக்கள் மன்றம் சார்பில் 3 கருவிகள், மகிழ்ச்சி புரோமோட்டார்ஸ் நிறுவனர் சிவகுமார் ஒரு கருவியும், கற்பகமூர்த்தி மோட்டார்ஸ் நிறுவனர் கணேசன் ஒரு கருவியும் வழங்கினர்.

இதுகுறித்து தமிழக மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ‘‘ ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தோம். ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் கருவிகளை வாங்க தன்னார்வலர்களும் பண உதவி செய்தனர்.

மொத்தம் 10 கருவிகள் வாங்க முடிவு செய்து, முதற்கட்டமாக மருத்துவமனைக்கு 6 வழங்கியுள்ளோம். நான்கு கருவிகள் விரைவில் வந்துவிடும். மேலும் ஒரு கருவியை வீடுகளில் ஆக்சிஜனுக்காக தவிப்போருக்கு வழங்க உள்ளோம், என்று கூறினார்.

குன்றக்குடி அடிகளார் ரூ.10 லட்சம் நிவாரண உதவி:

கரோனா தொற்றை தடுக்க போராடும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், முதல்வர் நிவாரண பணிக்காக ரூ.10 லட்சம் வழங்கி உள்ளதாக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT