வைப்பாறு அருகே மின்னல் தாக்கி இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
வைப்பாறு அருகே ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் கோட்டை பாண்டி(55). இவர் வைப்பாறு கிழக்கு கடற்கரையில் எடை நிலையம் வைத்துள்ளார்.
வைப்பாறு தெற்கு தெருவை சேர்ந்த வானமல்லுசாமி மகன் ரமேஷ்(30). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ரமேஷ் விடுமுறைக்காக இன்று ஊருக்கு வந்துள்ளார். அப்போது வழக்கம் போல் கோட்டை பாண்டி எடை நிலையத்துக்கு சென்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மதியம் இருவரும் ஸ்ரீராமபுரத்தில் உள்ள கோட்டைபாண்டிக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்றுள்ளனர். சுமார் ஒரு மணியளவில் மழை பெய்ய தொடங்கியதால், இருவரும் அங்குள்ள வேப்பமரத்தின் கீழ் சென்று நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில், கோட்டை பாண்டி, ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தோட்டத்துக்குச் சென்ற கோட்டைபாண்டியின் திரும்ப வராததால், அவரது மகன் செல்வம் மாலை 3 மணிக்கு அங்கு சென்றார். அப்போது இருவரும் மின்னல் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து குளத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவர் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.