மார்க்கெட் இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுகர் பஜாரில் காய்கறி வியாபாரிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பஜார் காய்கறி மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக காய்கறி கடைகள் அனைத்தும் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க தினந்தோறும் விருதுநகர் மார்க்கெட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிகிறார்கள். பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் வருவதால் மேலும் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், விருதுநகர் பஜாரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் கடந்த ஆண்டு கரோனா காலத்தில் பின்பற்றப்பட்டதைப் போல காய்க்கறி சந்தையை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானம், உழவர் சந்தை, அல்லம்பட்டி முக்கு அருகே உள்ள மாநகராட்சி திடல் போன்ற இடங்களில் கடைகள் அமைக்க அறிவுறுத்தினர்.
ஆனால், வியாரிகள் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து பஜார் பகுதியிலேயே காய்கறி மார்க்கெட் இயங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி விருதுநகர் பாஜரில் வியாபாரிகள் இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பஜாரில் தொடர்ந்து காய்கறி மார்க்கெட் இயங்க அனுமதிக்க இயலாது எனக் கூறினர். அதைத்தொடர்ந்து வியாரிகள் நடத்திய கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்யவும், பஜாரில் வெங்காய மொத்த வியாபாரம் செய்யவும், சில்லரை வியாபாரம் செய்யக் கூடாது என்றும், பஜாரில் பழ வியாபாரம் கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றனர்.