ஒரு நிமிட வாசிப்பு

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது: தென்காசியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

த.அசோக் குமார்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மதியத்துக்கு மேல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.நேற்று, தினசரி பாதிப்பு 28,897 என்றளவில் இருந்தது.

அன்றாட கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு, மளிகைக் கடைகள், டீக்கடைகள், இறைச்சி, மீன் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.

உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மதியம் வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவான அளவில் இருந்தது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சென்றன.

பொதுப் போக்குவரத்துக்கு அரசு, தனியார் பேருந்துகள், வாடகைக் கார்கள் இயங்காததால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.

மதியத்துக்கு மேல் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளிலும் அனைத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

SCROLL FOR NEXT