கரூரில் அரசுப் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன் (32). மற்றொரு காவலர் வீமராஜா (31). இன்று (மே 09) இருவரும் கரூரில் இருந்து ஆயுதப்படை வளாகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
கரூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு ஏசி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மணிகண்டன் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த வீமராஜா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அமராவதி ஆற்றுப்பாலத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். ஆயுதப்படை காவலர் உயிரிழந்த சம்பவம் போலீஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.