ஒரு நிமிட வாசிப்பு

உசிலம்பட்டியல் விவசாயி தற்கொலையை கண்டித்து மறியல்: துணை முதல்வர் கார் முற்றுகை

என்.சன்னாசி

உசிலம்பட்டியில் விவசாயி தற்கொலையைக் கண்டித்து திடீரென மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி சகாதேவன் (45) கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் முத்துவீரன்( தாழ்த்தப்பட்ட சமூகம்) என்பவரிடம் இருந்து வீடு வாங்கியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் மிரட்டியதால் சகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் இன்று தி.விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருமங்கலத்திலிருந்து தேனி நோக்கிச் சென்ற துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் காரை மறியலில் ஈடுபட்டடிருந்த மக்கள் திடீரென முற்றுகையிட்டு, அவரிடம் கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.

இதை சற்றும் எதிர்பாராத போலீஸார் ,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT