திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் பூங்கொடி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகம் இன்று மூடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியராகப் பூங்கொடி பணியாற்றி வருகிறார். மேலும் இவர், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார்.
இவருக்குக் கடந்த ஓரிரு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது நேற்று (ஞாயிற்றுக் கிழமை) உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஆரணியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை (இன்று) மூடப்பட்டது. அலுவலக உள் பகுதி மற்றும் வெளிப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
மேலும் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் உட்பட சுமார் 12 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராகப் பூங்கொடி உள்ளதால், வாக்கு எண்ணும் பணிக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், புதியதாக ஒருவரைத் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிப்பது குறித்து, தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.