புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அதிமுக வேட்பாளர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆலங்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேல். இவர், தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருந்தே சர்க்கரை, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தர்ம.தங்கவேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப்.23-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து 24-ம் தேதி கிளம்பி சென்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தான் நலமுடன் இருப்பதாக தர்ம.தங்கவேல் தெரிவித்தார்.