தேனி அருகே வைகை ஆற்றில் மூழ்கி இருவர் பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவருக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது. இவர் கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானராஜ் (45). இவர் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்தார். இவருக்குத் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது வைகை அணை பகுதியில் உள்ள பழைய பாலம் அடியில் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்தவர்கள் வைகை அணை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று மாலை இருவரையும் தேடி வந்தனர். இரவு நேரம் தேட முடியாது என்பதால், மீண்டும் இன்று காலை முதல் தேடி வந்தனர். 2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர்.
இருவரின் உடலையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.