பல்லடத்தில் விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி. 
ஒரு நிமிட வாசிப்பு

பல்லடத்தில் நள்ளிரவில் கடைகளுக்குள் புகுந்த முட்டை லாரி; கடைகள், இருசக்கர வாகனங்கள் சேதம்

இரா.கார்த்திகேயன்

பல்லடம் பேருந்து நிலையம் அருகே முட்டை லாரி கட்டுப்பாட்டை இழந்து கடைகள் மீது மோதியதில் நேற்று நள்ளிரவு விபத்து ஏற்பட்டது. இதில், கடைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன.

கோவை- திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பேருந்து நிலையம் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில், முட்டைகளை ஏற்றி வந்த லாரி நேற்று நள்ளிரவு திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த மூன்று கடைகள் மீது மோதியது. அங்கிருந்த இருசக்கர வாகனப் பணிமனை மீதும் மோதியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

அதேபோல், மின்மாற்றிக் கம்பிகள் மீது மோதியதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. ஊரடங்கு நேரம் என்பதால் வெளியே பொதுமக்கள் எதுவும் நடமாட்டம் இல்லாத நிலையில், திடீர் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர், பல்லடம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதற்குள், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சேதம் அடைந்த கடைகள்.

மது போதையில் இருந்ததால், ஓட்டுநர் அங்கிருந்து தப்பியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், லாரியில் இருந்த முட்டைகளும் சேதம் அடைந்தன. மது போதையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் பல்லடம் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT