ஒரு நிமிட வாசிப்பு

கொடைக்கானல் இயற்கை எழிலை குடும்பத்தினருடன் ரசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர், கூக்கால் மலை கிராமங்களில் இயற்கை எழிலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தினருடன் கண்டுரசித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இரண்டு தனி விமானங்கள் மூலம் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேருடன் மதுரை வந்து அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகைதந்தார்.

கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த மூன்று தினங்களாக தங்கியிருந்த ஓட்டலைவிட்டு அவர் வெளியில் வரவில்லை.

அவருடன் வந்திருந்த அவரது மகன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநி திஸ்டாலின் மட்டும், நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சனி்க்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை சென்றுவிட்டு அன்று இரவு கொடைக்கானல் திரும்பினார்.

கொடைக்கானல் வந்து சேர்ந்த நாள் முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் ஓட்டலைவிட்டு வெளியில் வராதநிலையில் இன்று ஓட்டலில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான மன்னவனூர், கூக்கால் மலைகிராம பகுதிக்குச் சென்றனர்.

மன்னவனூரில் உள்ள மத்திய அரசின் செம்மறி ஆடுகள் உரோம மற்றும் முயல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டனர். அங்கு வளர்க்கப்படும் உரோமங்கள் மிகுந்த ஆட்டுக்கூட்டத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முயல் பண்ணையில் அதிக எடை கொண்ட மெகா முயல்களை கண்டுரசித்தனர்.

தொடர்ந்து வனத்துறைக்கு சொந்தமான மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்காவிற்குச் சென்று அங்குள்ள ஏரி உள்ளிட்ட இயற்கை எழிலை கண்டுரசித்தனர். தொடர்ந்து கூக்கால் மலைகிராமத்திற்கு சென்று அங்குள்ள ஏரி மற்றும் மலைப்பகுதியின் எழிலைக் கண்டனர். இதையடுத்து தங்கியிருந்து ஓட்டலுக்குத் திரும்பினர்.

நான்கு நாட்கள் ஓய்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வந்தநிலையில், நாளை குடும்பத்தினருடன் சென்னை திரும்புவார் என எதிபார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT