போதிய சுகாதார வசதியில்லை என்று கூறி அரியலூர் கரோனா சிகிச்சை மையத்தில் இருக்கும் நோயாளிகள் இன்று (ஏப்.16) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில், தற்போது அலோபதி மற்றும் சித்த மருத்துவத்துடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கியிருக்கும் கரோனா நோயாளிகள், போதிய சுகாதார வசதியில்லை என்று கூறி சிகிச்சை மையத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ''இங்குள்ள அறைகளை முறையாகச் சுத்தப்படுத்துவதில்லை, நோயாளிகள் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவு, அதற்குப் பயன்படுத்தப்பட்ட இலைகள் மற்றும் பேப்பர்கள் போடும் குப்பைத் தொட்டி முழுவதும் நிரம்பி அறைகளிலேயே கீழே விழுந்து கிடக்கின்றன. இதனை எடுத்துச் செல்ல முறையாக ஆட்கள் வருவதில்லை. நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை.
காவலர்கள் மற்றும் மருத்துவர்களின் பணி சிறப்பாக உள்ளது. தூய்மைப் பணி மட்டும் முறையாக இல்லை. இங்கிருக்கும் காவலர்களுக்குத் தகவல் கொடுத்தும் சுகாதாரத் துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை'' என்று தெரிவித்தனர். மேலும், ''இங்கு தங்கியுள்ள அனைவரையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வையுங்கள்'' என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.