காரைக்காலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு, புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் மரியாதை செலத்தினர்.
அரசியல் கட்சியினர் மரியாதை
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், மாவட்ட பாஜக தலைவர் ஜெ.துரைசேனாதிபதி தலைமையில் பாஜகவினர், அதிமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.