காரைக்கால் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 234 வாக்குச்சாவடிகளில் நேற்று (ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன், காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் உரிய பாதுகாப்புடன், நேற்று இரவு காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்துக்குக் கொண்டுவந்தனர்.
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா, தேர்தல் பார்வையாளர் (பொது) துஷார் குமார் பட், தேர்தல் பார்வையாளர் (காவல்) பி.ஆர்.மீனா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.