கீழக்காசாக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகள். 
ஒரு நிமிட வாசிப்பு

காரைக்கால் அருகே திடீரென 2 பள்ளிப் பேருந்துகள் எரிந்து சேதம்

வீ.தமிழன்பன்

காரைக்கால் அருகே திடீரென 2 பள்ளிப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி அரசு சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.1 கட்டணத்தில் மாணவர்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரவல் சூழலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் காரைக்கால் அருகே கீழகாசாக்குடி சிவன் கோயில் திடலில் 3 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் இன்று (ஏப்.4) திடீரென ஒரு பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதைச் சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அருகில் இருந்த மற்றொரு பேருந்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்தத் தீ விபத்தால் 2 பேருந்துகளும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்துக் கோட்டுச்சேரி போலீஸாரும், கல்வித் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT