உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்துக்கு வந்தபோது, கோவையில் வட இந்தியர்களால் நடத்தப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களும் அதைக் கண்டித்து வணிகர்கள் நடத்திய கடையடைப்புப் போராட்டமும் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தரப்பை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம்.
இதுகுறித்து அன்றிரவே கட்சியின் களப்பணியாளர்களைக் கூட்டி கருத்துக் கேட்டாராம் வானதி. இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்ற தொனியிலேயே பேசினார்களாம். இருந்தாலும் அப்செட்டில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், “ஆதித்யநாத் இங்கே பிரச்சாரம் செய்ய வருவதில் வானதிக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தான் அவரை வலுக்கட்டாயமாக கோவைக்கு இழுத்து வந்துவிட்டார்கள்.
வானதி கஷ்டப்பட்டுச் சேகரித்து வைத்திருந்த ஓட்டுகளுக்கு ஒரேநாளில் இப்படி வேட்டுவைத்து விட்டார்கள் ஆர்எஸ்எஸ் சாமியார்கள்” என்று சொல்லி வேதனைப்படுகிறார்கள். இதனிடையே, “கோவையில் எவ்வித பதற்றமும் இல்லை. எதிர்க்கட்சிகள் தான் இங்குள்ள சிறுபான்மையினர் மத்தியில் வேண்டுமென்றே பதற்றத்தைத் திணிக்க நினைக்கிறார்கள்” என்று சாதுர்யமாகச் சமாளித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் வானதி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்