வனத்துறைக்குச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, அங்கிருந்த மலைப்பாம்பைக் கையில் எடுத்துப் பார்த்து மகிழ்ந்தார்.
சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வனத்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். அப்போது மரக்கன்றுகளை நட்டார். பிறகு அங்குள்ள வனவிலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
அங்கிருந்த மலைப் பாம்பைப் பார்த்த தமிழிசை, அதைக் கையில் தொட்டுப் பார்க்க விரும்பினார். வனத் துறையினரின் உதவியுடன் மலைப்பாம்பைக் கையில் எடுத்துப் பார்த்து மகிழ்ந்தார். அத்துடன் அங்குள்ள வனவிலங்கு, பறவைகளின் மாதிரிகளையும் பார்வையிட்டார். வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வனங்கள், விலங்குகள் பற்றி, ஆளுநரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஷ்வரி, தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.