தமிழக முதல்வர் குறித்து ஆ.ராசாவின் தரக்குறைவான விமர்சனத்துக்கு கவுதமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமி குறித்துத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆ.ராசாவின் பேச்சுக்குத் தமிழக முதல்வர் பிரச்சாரத்தின்போது கண் கலங்கினார். அதனைத் தொடர்ந்து மனம் திறந்து மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார் ஆ.ராசா. இதனிடையே, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், ஆ.ராசாவுக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, போராட்டங்கள் என நடைபெற்று வருகின்றன.
ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த கவுதமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் காலம் சென்ற தாயார் தவசாயி அம்மாளை, திமுகவின் மூத்த தலைவர் இழிவுபடுத்திப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. தரக்குறைவான புண்படுத்தும் அவரின் பேச்சு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது.
ஒரு மகனாக நீங்கள் உணரும் வலியினை, உங்கள் உடன்பிறவா சகோதரிகளாக நாங்களும் உணர்கிறோம். ஒரு நியாயமான சமூகத்தின் அடிப்படை அம்சமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், குரலற்றவர்களுக்கும் மதிப்பையும் சமூகப் பாதுகாப்பையும் அளிப்பதே.
நம் வீடுகளில் பொக்கிஷங்களாக மதிக்கப்படும் தாய்மார்களையும், சகோதரிகளையும் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசிவரும் திமுக தலைவர்களால் எப்படி அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான நல்லாட்சியை வழங்க முடியும்? எந்தவிதமான சமூகப் பாதுகாப்பு உறுதியைக் கொடுத்துவிட முடியும்?
பெண்களை இழிவுபடுத்துவோருக்கு அரசியலில் ஒருபோதும் இடம் கிடையாது என்பதைத் தாய்மார்கள், அக்கா, தங்கைகள், பெண்கள் ஆகியோர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் நிரூபித்துக் காண்பிப்பர். இப்படிப்பட்டவர்களைப் பொறுப்பான பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது நம் சமூகக் கடமையும்கூட".
இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.