தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது மகன் ஒமர் அப்துல்லா ட்விட்டர் பக்கத்தில், "எனது தந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நானும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். எங்களுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 2ம் தேதி ஃபரூக் அப்துல்லா முதல் தவணை கரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் அடுத்த தடுப்பூசியைப் பெறும் வரையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 56,211 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 271 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா புள்ளிவிவரம்: (மார்ச் 29 நிலவரம்)
மொத்த பாதிப்பு: 1,20,95,855
குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,13,93,021
சிகிச்சை பெறுவோர்: 5,40,720
பலி எண்ணிக்கை: 1,62,114
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை: 6,11,13,354