மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் மதுரை வீரன் சாமி கோயிலில் நேற்று மாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை வரும் வழியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலா ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சை மாவட்ட கோயிலிலிருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கினார்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
அதனையொட்டி இன்று மாலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சசிகலா வருகை தந்தார். அவருடன் அவரது உறவினர் டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் வழிபாடு நடத்தினார். பின்னர் அம்மன் சன்னதி வாசலை ஒட்டியுள்ள கிழக்கு சித்திரை வீதியிலுள்ள மதுரை வீரன் சுவாமி கோயிலில் வழிபாடு செய்தார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.